நீயா நானா? - மருத்துவர் மேல் பாய்ச்சல்
நீயா நானா? - மருத்துவர் மேல் பாய்ச்சல்
தொழிலில் உள்ள எல்லா பொறியாளர்களுமே நல்ல பொறியாளர்களா எல்லாருமே நல்ல ஆசிரியர்களா? அது போலத் தான் மருத்துவத்துறையும் அங்குமிங்கும் குற்றம் குறை இருக்கத் தான் செய்கிறது. எனக்குத் தெரிந்து, ஒரு ஐடி கம்பெனியில் பணிக்குச் சேர்ந்த ஒன்றிரண்டு வருடத்தில், ஒரு பையனோ பெண்ணோ ஆன்சைட் வாய்ப்பு கிடைக்குமா என்று தான் பார்க்கிறார்கள். அது அமெரிக்காவுக்கு சேவை செய்ய எல்லாம் இல்லை, பணம் ஈட்டத் தான். மனித உபாதைகளையும் நோய்களையும் குணப்படுத்துவதால் அல்லது உயிரைக் காப்பாற்றுவதால் மருத்துவத்துறைக்கு சமூகத்தில் உயரிய இடமளிக்க வேண்டும் என்ற விவாதத்துக்குள் செல்வதில் எந்தப் பயனுமில்லை.
Medicine is also a profession like others. மேலும் வணிக நோக்கு (அல்லது பொருள் சார்பு -materialism) மிகுந்திருக்கும் காலச்சூழலில், மருத்துவத்துறையிலும் அதன் தாக்கம் இருப்பது இயல்பானதே. பொதுவாக ஆசிரியர்கள், மருத்துவர்கள் என்ற இரு தரப்பினரையும் சற்று உயர்வான இடத்தில் நம் சமூகம் பல காலமாக வைத்து வந்துள்ளது. அவர்களின் குறைபாடுகள் சற்று தீவிரமாக பார்க்கப்படுவதற்கு இதுவும் ஒரு முக்கியக்காரணம். ஒரு 30-35 ஆண்டுகளுக்கு முன் அவை இரண்டும் மேன்மை (Nobility என்ற பொருளில்) மிக்க தொழில்களாக, சேவையாக கருதப்பட்டன. இப்போது அது சீரியஸாக கேள்விக்குள்ளாகி வருகிறது, வருத்தமான விஷயம் தான். நிற்க.

மருத்துவத்துறை சார் பிரச்சினைகளை/குறைபாடுகளை ஆராய்ந்து களையவேண்டிய கடமை மருத்துவர்களுக்கும், அரசுக்கும், சமூகத்திற்கும் என்று எல்லாருக்கும் உள்ளது என்பதை உணர்தல் அவசியம். விஜய்டிவியில் சமீபத்தில் ஒளி”பரபரப்பான” ”நீயா நானா” நிகழ்ச்சி கொண்டு செல்லப்பட்ட விதமும், அதில் நடந்தேறிய Gimmicks-ம் டி.ஆர்.பி எகிறுவதற்கு பயனளித்திருக்குமே அன்றி, அதில் சமூக நோக்கு உள்ளது என்று ஒப்புக் கொள்வது கடினம். மருத்துவத்தொழில் மீது வைக்கப்படும் முக்கியப் புகாரான அலட்சியப்போக்கை (Negligence) கண்டறிய/எதிர்கொள்ள சுமுகமாக முறையில் வழிவகை காணப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, வேறு விஷயம்.
ஒரு கேள்வி கேட்டு விட்டு எதிர்தரப்பு பதிலை முடிக்கும் முன்னே குறுக்கீடு என்பது, அப்பட்டமான சார்பு தெறிக்கும், அர்னாப் ஸ்டைல் விவாதமேடை, அதனால் துளியும் பயன் இல்லை. மாஸ்டர் ஹெல்த் செக் (MHC) என்பதை விளக்கக் கூட விடாமல், ”மாஸ்டர்” என்ற சொல் இருப்பதால், அது அனைத்து வகையான பரிசோதனைகளையும் உள்ளடக்கிய ஒன்று போலத் தோற்றமளிப்பதாகக் கூறுவது, உளறுதல் அல்லாமல் வேறென்ன? நல்லவேளை, ”மாஸ்டர்” ஹெல்த் செக் என்பதை சரக்கு மாஸ்டர் அல்லது ஹெட்மாஸ்டருக்கு மட்டுமே செய்யவேண்டும் என்று மருத்துவர் மேல் பாய்ந்த சிலபல கனவான்களில் யாரும் சொல்லவில்லை ;-)
மருத்துவர்களுக்கு எதிராக மக்களைத் தூண்டி விடுவதின் வாயிலாக யதார்த்தத்தில் பிரச்சினைகளை முறையாக அலச முடியுமா, தீர்வை அணுகத்தான் முடியுமா ? தொடர்பில்லாமல் அவரவர் ஏதேதோ பேசுவதை விடுத்து, மருத்துவத்துறை சார்ந்த 3-4 முக்கியப்பிரச்சினைகளை கையில் எடுத்து, இரு தரப்பு கருத்துகளையும் கேட்டறிந்து, ஆரோக்கியமான முறையில் அவற்றின் தாக்கங்களையும், தீர்வுகளையும் முன் வைப்பதே, சமூகப்பிரச்சினைகளை அலசி ஆராய்வதாகக் “காட்டி”க்கொள்ளும் ஒரு நிகழ்ச்சிக்கு அழகு! இதையெல்லாம் மருத்துவத்துறையை விட பல மடங்கு வணிக நோக்கமும், அப்பட்ட சார்பு நிலை பற்றி துளியும் கவலையில்லாத டிவி மீடியாவில் எதிர்பார்க்கலாமா என்று யாராவது கேள்வி கேட்டால் நான் அம்பேல்!
மேற்கூறிய நிகழ்ச்சியில் மருத்துவரை மட்டம் தட்டவேண்டும் என்ற சார்பு நிலையுடன், அதிபுத்திசாலித்தனமாக பேசுவதாக நினைத்துக் கொண்டு ஆவேசப்படுவதும், ஒரு isolated incident-ஆல் (இன்னும் சிலவும் இருக்கலாம் தான்) பாதிக்கப்பட்டவரை முன்னிறுத்தி ஒரு உணர்ச்சிக் கொந்தளிப்பையும் காழ்ப்பையும் உண்டாக்கி குளிர்காய்வதும், ’நீயாநானா’ இன்னும் பிரபலம் அடைவதற்கும், கோபிநாத்தின் “சமூகக்காவலர்” இமேஜை செம்மைப்படுத்தவும் நிச்சயம் உதவலாம்! ஏதோ ஒரு கோவை(?) மருத்துவமனையின் அலட்சியப்போக்கால் பாதிக்கப்பட்ட அப்பெற்றோருக்கு ”உரிய நீதி” கிடைக்க, கடைசி வரை விஜய்டிவியும், ”நீயாநானா” குழுவினரும் துணை நிற்கப் போகிறார்களா என்று யாராவது கேட்டுச் சொல்லவும்.
இந்த நிகழ்ச்சிக்கு முன்னாலும், சிலபல “நீயா நானா” நிகழ்ச்சிகளில் “அனைத்தும் யாம் அறிவோம்” என்ற தொனியை காண முடிந்தது. மருத்துவருக்கு எதிரான நிகழ்ச்சியில் அத்தொனியும், blatant-ஆன சார்பும் சற்று தாங்கமுடியாமல் இருந்ததால், சுட்டிக்காட்டவேண்டும் என்று தோன்றியது! Master Health Check தேவையற்றது என்று குரல் கொடுத்தது போல, சினிமா தியேட்டர்களில் MRP-க்கு 5-6 மடங்கு விலையில் தின்பண்டங்கள் விற்கப்படும் அநியாயத்திற்கு எதிராகவும் “நீயா நானா” குரல் கொடுத்தால், பொதுமக்களுக்குப் புண்ணியமாப் போகும். மல்டிபிளக்ஸ்களில் சினிமா டிக்கெட்டுக்கும், அங்கு விற்கப்படும் ஜங்க் ஃபுட்ஸ், குளிர்பானங்களுக்கும் சாமானிய மக்கள் அடிக்கடி கொட்டிக் கொடுக்கும் பணத்திற்கு, அவர்கள் வருடத்திற்கு ஒரு முறை அடிப்படை உடல்நலப் பரிசோதனை செய்து கொள்வது ஒன்றும் அத்தனை மோசமான விஷயமாகத் தோன்றவில்லை.
(அந்த நிகழ்ச்சியில்) எவ்வளவு அராஜகம் பண்ணியிருந்தால், ஒரு டாக்டர் இப்படி (கீழுள்ள லிங்க்கில் சுட்டப்பட்டிருக்கும் ஆடியோ!) பொங்கியிருப்பார் என்று யோசியுங்கள்! One needs to understand that Response will always be proportionate to one's behavior in a TV Show!